Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 38,716 ஆக உயர்வு: 349 பேர் பலி

ஜுன் 12, 2020 06:49

சென்னை: தமிழகத்தில் நேற்று (ஜூன் 11) ஒரே நாளில் 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,716 ஆகவும், பலி எண்ணிக்கை 349 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் மேலும் 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 38 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 38,716 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 77 பரிசோதனை மையங்கள் மூலமாக  ஒரே நாளில் 16,829 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இதுவரை தமிழகத்தில் 6,55,675 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. சென்னையில் 19 பேரும், செங்கல்பட்டில் 2 பேரும், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் தலா ஒருவரும் என மொத்தம் 23 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 349 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழப்புகளில் 21 பேர் அரசு மருத்துவமனையிலும், 2 பேர் தனியார் மருத்துவமனையிலும் பலியாகியுள்ளனர்.  ஒரே நாளில் 1,372 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 20,705 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 17,659 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் மொத்த பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,999 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 32,422 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 4,295 பேரும் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்