Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 4,405 ஆக உயர்வு

ஜுன் 11, 2020 07:45

சென்னை: சென்னையில் உள்ள ராயபுரம் மண்டலத்தில் மட்டும் இதுவரை 4405 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் 4 ஆயிரம் பாதிப்பை கடந்த முதல் மண்டலமாக ராயபுரம் மாறியது.

தமிழகத்தில் நேற்று (ஜூன் 10) புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 1,927 பேரில் சென்னையில் மட்டும் 1,392 பேர் உள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,937 ஆக அதிகரித்துள்ளது. இதில் 12,507 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 258 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் பாதிப்புகள் குறித்து மண்டல வாரியாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

அதன்படி, அதிகபட்சமாக ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 60.15 சதவீதம் பேரும், பெண்கள் 39.84 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 0.01 சதவீதத்தினரும் உள்ளனர். உயிரிழப்புகளை பொறுத்தவரையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 54 பேரும், திரு.வி.க.நகரில் 44 பேரும்,தேனாம்பேட்டையில் 39 பேரும், தண்டையார்பேட்டையில் 31 பேரும், அண்ணாநகரில் 23 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மண்டல வாரியாக மொத்த பாதிப்பு:

ராயபுரம் - 4405
தண்டையார்பேட்டை - 3405
தேனாம்பேட்டை - 3069
கோடம்பாக்கம் - 2805
திரு.வி.க.நகர் - 2456
அண்ணாநகர் - 2362
அடையாறு - 1481
வளசரவாக்கம் - 1170
திருவொற்றியூர் - 972
அம்பத்தூர் - 901
மாதவரம் - 724
ஆலந்தூர் - 521
பெருங்குடி - 481
சோழிங்கநல்லூர் - 469
மணலி - 383

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 10 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

ஊரடங்கு விதிமீறலில் ஈடுபட்டதாக தமிழகத்தில் இதுவரை ரூ.11.61 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,15,938 பேர் கைதாகி ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4,61,582 வாகனங்கள் பறிமுதல்; 5,70,892 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்