Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 50 மாவட்டங்களுக்கு மத்திய குழுவினர் விரைவு

ஜுன் 10, 2020 06:49

புதுடெல்லி : கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள, 15 மாநிலங்களின், 50 மாநகராட்சிகள் அல்லது மாவட்டங்களில், நிலைமையை கட்டுப்படுத்த, தலா மூன்று பேர் கொண்ட, மத்தியக் குழு அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு, நாடு முழுதும் தீவிரமாகி வருகிறது. தொடர்ந்து ஏழாவது நாளாக நேற்றும், மிக அதிக அளவாக, 9,987 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது.அதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, இரண்டு லட்சத்து, 66 ஆயிரத்து, 598 ஆக உயர்ந்தது. மேலும், 266 பேர் உயிரிழக்க, பலி எண்ணிக்கை, 7,466 ஆனது.

இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: நாட்டில் பரவலாக வைரஸ் பாதிப்பு குறைந்தாலும், சில குறிப்பிட்ட பகுதிகளில், அதன் தாக்கம் தீவிரமாக உள்ளது. இதையடுத்து, வைரஸ் பரவலை தடுப்பது உள்ளிட்டவற்றில், மாநில அரசுகளுக்கு உதவி செய்யும் வகையில், மத்தியக் குழு அனுப்பப்பட்டுள்ளது.


ஒரு குழுவில், மருத்துவ நிபுணர்கள் அல்லது தொற்று நோய் நிபுணர்கள் இரண்டு பேர் இருப்பர். அவர்களுடன், நிர்வாக ரீதியில் உதவிட, மூத்த இணைச் செயலர் அந்தஸ்து அதிகாரியும் இடம் பெறுவார். இவர்கள் மாநில அரசுடனும், குறிப்பிட்ட மாவட்ட அல்லது மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து, அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து திட்டமிடுவர்.

அதன்படி, நாடு முழுதும், 15 மாநிலங்களில் உள்ள, 50 மாநகராட்சி அல்லது மாவட்டங்களுக்கு, தலா ஒரு குழு அனுப்பப்படும். சில குழுக்கள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. மஹாராஷ்டிரா, தமிழகத்துக்கு தலா, ஏழு; அசாம், ஆறு; ராஜஸ்தான், ஒடிசா, மத்திய பிரதேசத்துக்கு தலா, ஐந்து; தெலுங்கானா, கர்நாடகா, பீஹார், உத்தர பிரதேசம், ஹரியானாவுக்கு தலா, நான்கு; உத்தரகண்ட், மேற்கு வங்கம், டில்லி, குஜராத்துக்கு தலா, மூன்று குழுக்கள் அனுப்பப்படுகின்றன.

அந்தந்த மாவட்டங்கள் அல்லது மாநகராட்சி பகுதிகளில், பரிசோதனை செய்வதற்கு உள்ள தடைகள், குறைந்த அளவு செய்யப்படும் சோதனைகள், அதிக பாதிப்பு விகிதம் குறித்து இந்தக் குழு ஆராயும். மேலும், மருத்துவ வசதிகள் குறைவு, உயிரிழப்பு அதிகரிப்பு, இரட்டிப்பாகும் காலம் கூடுவது என, பல்வேறு பிரச்னைகள் குறித்து, அந்தந்த நிர்வாகங்களுடன், மத்தியக் குழுவினர் ஆய்வு செய்வர். வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த, மாநில அரசுகளுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கவே இந்தக் குழுவினர் அனுப்பப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்