Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாளுக்குள் ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட் கெடு

ஜுன் 09, 2020 09:31

புதுடெல்லி: பிற மாநிலங்களில் பணிபுரியும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா லாக்டவுனால் இடம்பெயர் தொழிலாளர்கள் அனுபவித்த துயரங்கள் இந்த தேசத்தையே உலுக்கி எடுத்தன. சாலை மார்க்கமாக நடந்தே சென்று மாண்டு போனவர்கள், தண்டவாளத்தையே பாதையாக்கி நடந்து போய் ரயில்களில் அடிபட்டு இறந்து போனவர்கள் என நித்தம், நித்தம் இந்த தொழிலாளர்கள் துயரம் நெஞ்சை பிழிய வைத்தன.

இந்த விவகாரத்தை தாமே முன்வந்து விசாரித்து கொண்டிருக்கிறது உச்சநீதிமன்றம். இந்த வழக்கில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது உச்சநீதிமன்றம் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தது. அதில், இடம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் மத்திய- மாநில அரசுகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

சொந்த ஊர் திரும்பும் இடம் பெயர் தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும். அந்த பட்டியலில் அவர்கள் முன்பு எங்கே என்ன பணி செய்தார்கள்? என்பதையும் சேர்க்க வேண்டும். இடம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டங்களை மத்திய- மாநில அரசுகள்,
லாக்டவுனுக்குப் பின்னர் உருவாக்க வேண்டும். மேலும் லாக்டவுன் விதிமுறைகளை மீறியதாக இடம்பெயர் தொழிலாளர்கள் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறவும் வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன் மாநில அரசுகள் கேட்டுக் கொண்ட 24 மணிநேரத்துக்குள் இடம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவில் தெரிவித்துள்ளது இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூலை 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்