Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நடிகர் வரதராஜனின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் மறுப்பு

ஜுன் 08, 2020 11:11

சென்னை: சென்னையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் குறைவாக உள்ளதாக நடிகரும், பத்திரிகையாளருமான வரதராஜனின் குற்றச்சாட்டை சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சென்னையில் மாநகராட்சி அதிகாரிகளுடன் அமைச்சர்கள் குழுவினர் ஆலோசனை நடத்திய பின்னர், அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்தனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர் கெரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக நடந்து வருகிறது. ஆனால் சிலர் விமர்சனம் செய்கின்றனர். இது தவறு என்றார்.
நடிகர் வரதராஜன் பேசிய வீடியோ குறித்து நிருபர்கள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ; அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் தட்டுப்பாடு இல்லை. இது தவறான தகவல். குறை சொல்ல வேண்டாம். விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். அவர் எந்த மருத்துவமனையில் பார்த்தால் என்பதை சொல்ல வேண்டும். நேரில் வந்து பார்க்க நான் தயார். அரசு நிலை குறித்து தவறான தகவல் பரப்பாதீர்கள். வரதராஜன் மீது பெருந்தொற்று நோய்த்தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

வரதராஜனை அழைத்து சென்று, டாக்டர், சுகாதார பணியாளர்களின் பணியை காட்ட தயார். வதந்தி பரப்பினால், அரசு வேடிக்கை பார்க்காது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா தடுப்பில் கடும் நெருக்கடியில்அரசு செயல்படும் சூழலில் வதந்தி பரப்பக்கூடாது. கொரோனா தடுப்பு பணிகளில் ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றுகின்றனர். ஆதாரம் இல்லாத எந்த தகவலையும் பரப்ப வேண்டாம். கண்ணுக்கு தெரியாத வைரசை எதிர்த்து போராடும் நிலையில் விமர்சனங்கள் வேண்டாம்.

சென்னையில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 5 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. தமிழகத்தில், தனிமைபடுத்தப்பட்ட வார்டுகளில் போதுமான படுக்கைகள் உள்ளன. படுக்கைகளுக்கு தட்டுப்பாடு இல்லை. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தமிழகத்தில் அனைத்து வசதிகளும் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தும்படி கூறி வருகிறோம்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.
முன்னதாக நடிகரும் செய்தி வாசிப்பாளருமான வரதரராஜன் பேசிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதில்; " எனது நண்பர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் போதிய அளவு இல்லை. மக்கள் கொரோனா வராமல் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
அமைச்சர் பேட்டிக்கு பின் வரதராஜன் வெளியிட்ட வீடியோவில் நான் அரசு குறித்து குறைகூறும் நோக்கத்தில் எதையும் செய்யவில்லை. எனது நண்பருக்கு அனுப்பிய வீடியோவை யாரோ சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். எனக்கு அரசு மீது குற்றம் சொல்லும் எண்ணம் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்