Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை: போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

ஜுன் 02, 2020 10:05

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே தைல மரக்காட்டில் 13 வயது சிறுமியை அடித்துக் கொன்ற வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பெற்ற மகளை தந்தையே நரபலி கொடுத்து கொன்றது அம்பலமாகி உள்ளது. இதையடுத்து அவரை போலீசார்
கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். வயது 55. இவரது மனைவி இந்திரா. இவர்களது 13 வயது மகள்தான் வித்யா. தச்சங்குறிச்சியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், 15 நாட்களுக்கு முன் இவர்களின் கிராமத்தை ஒட்டி பாப்பான்குளம் என்ற பகுதி உள்ளது. அங்குள்ள குளத்துக்கு அருகே உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க சிறுமி சென்றிருக்கிறார். அப்போது மர்மநபர்கள் சிறுமியை தைல மரக்காட்டிற்கு தூக்கிச் சென்றுள்ளனர்.

இந்த பகுதியில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் தைல மரக்காடு உள்ளது. காட்டுக்குள் சிறுமி செல்வதை பார்த்து பின்தொடர்ந்து வந்துள்ளனர். சிறிது நேரம் கழித்து, சிறுமி தைலமரக்காட்டில் படுகாயங்களுடன் விழுந்து கிடப்பதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சிறுமியை மீட்டு தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தீவிரமான சிகிச்சையளித்தும் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவலறிந்த கந்தர்வகோட்டை போலீசார் தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து சிறுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சிறுமியை கொன்றது யார்? என்ற விசாரணையிலும் இறங்கினர். தைல மரக்காட்டில் சிறுமியை பலாத்காரம் செய்ததால், உடல்முழுவதும் காயம் ஏற்பட்டு இறந்தாரா? என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டது. 

பிறகு பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமியை யாரும் பலாத்காரம் செய்யவில்லை என தெரியவந்தது. ஆனால், உடலில் ரத்த காயங்களை பார்த்தால், அடித்தே கொன்றுள்ளனர் என்றும் சந்தேகிக்கப்பட்டது. அவர்கள் யார் என கண்டுபிடிக்க 6 தனிப்படைகளும் அமைக்கப்பட்டது.

சிறுமி குடும்பத்துடன் வேறு யாருக்காவது பகை இருந்ததா?, அதற்காக பழிவாங்கவே அவர்கள் இந்த சிறுமியை அடித்து போட்டார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்தது. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சிறுமியின் தந்தையே மரணத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. சிறுமியின் தந்தைக்கு ஜோசியத்தில் அதிக நம்பிக்கை இருந்துள்ளது. எப்படியாவது பணக்காரர் ஆக வேண்டும் என்ற பேராசையும் இருந்துள்ளது. 

இந்த சமயத்தில்தான் மந்திரவாதி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நபரோ, சிறுமியை நரபலி கொடுத்தால் செல்வம் பெருகும் என்று தெரிவித்துள்ளார். இதற்காகவே சிறுமியை மந்திரவாதியிடம் தந்தை அழைத்து சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இது தொடர்பாக சிறுமியின் உறவினர்கள் 3 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது. தலைமறைவாக உள்ள மந்திரவாதியையும் போலீசார் தேடி வருகின்றனர். மகளை கொன்றால் பெரும் சொத்து சேரும் என்பதற்காக நரபலி தந்த இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்