Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தி.மு.க. 175 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட திட்டம்: கூட்டணி கட்சிகளுக்கு குறைவான தொகுதிகள் ஒதுக்கீடு?

மே 28, 2020 08:53

சென்னை: வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் வென்று தனித்தே ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக 175 தொகுதிகளுக்கு மேலாக தி.மு.க. நேரடியாக களம் காணும் திட்டத்தில் இருக்கிறது.

எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை தி.மு.க.விற்கு வாழ்வா?, சாவா? என்பதால், இந்த முறை கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களை பகிர்ந்தளித்துவிட்டு ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. அதேவேளையில் தோழமைக் கட்சிகளின் மக்கள் செல்வாக்கிற்கு ஏற்ப அந்த கட்சிகளுக்கு உரிய மரியாதை தரப்பட்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளதால் தி.மு.க. அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் சத்தமின்றி தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. கடந்த 2011-ல் அ.தி.மு.க.விடம் பறிகொடுத்த ஆட்சியை வரும் 2021-ல் மீட்டெடுப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்து வருகிறார். 10 ஆண்டுகள் தி.மு.க. ஆட்சியில் இல்லை என்றாலும் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்.

தி.மு.க.வுடன் தற்போதைய சூழலில், காங்கிரஸ், ம.தி.மு.க. இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தோழமைக் கட்சிகளாக இருக்கின்றன. இந்த தோழமைக் கட்சிகள் அனைத்திற்கும் தொகுதி ஒதுக்கீடு செய்வது என்பது மிகவும் சவாலான பணி. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் பேசி அவர்களுக்கு எதார்த்த நிலையை உணர்த்துவதற்குள் தி.மு.க. அ.தி.மு.க. ஆகிய இரு பெரும் கட்சிகளுக்கும் போதும் போதும் என்றாகிவிடும்.

தி.மு.க.வுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் பொறுப்பேற்ற பின்னர், தனித்து போட்டியிடலாம் என ஸ்டாலினிடம் அவர் கூறியதாக ஒரு செய்தி வந்தது. இது குறித்து விசாரித்ததில், அப்படி ஒரு முடிவை ஸ்டாலின் இதுவரை எடுக்கவில்லை என்றும், கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய கவுரவம் அளித்து கட்சிகளின் வாக்குசதவீதம், மக்கள் செல்வாக்கு ஆகியவைகளை அடிப்படையாக வைத்து சீட் ஒதுக்கீடு செய்ய முடிவெடுத்துள்ளார் என தெரியவந்தது.

இதனிடையே இந்த சட்டமன்றத் தேர்தலில் 175 தொகுதிகளுக்கு மேலாக தி.மு.க.வே நேரடியாக களமிறங்கும் என தெரிகிறது. காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தல்களில் அதிக இடங்களில் சீட் ஒதுக்கப்பட்ட நிலையில், அதனை அ.தி.மு.க. தனக்கு சாதகமாக்கி ஆட்சியை பிடித்தது. ஆனால் 2021-ல் காங்கிரசுக்கு 15 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க வாய்ப்பில்லை என தி.மு.க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்