Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கிணற்றில் மிதந்த சடலங்கள்; துப்பு துலவங்கியது: ஒரு பெண்ணுக்காக 9 பேரை கொன்ற பயங்கரம்

மே 26, 2020 11:12

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலத்தில் ஒரு பெண்ணுக்காக 9 பேரை கொன்று கிணற்றில் போட்டுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது சம்பந்தமாக 4 பேர் கைதாகி உள்ளனர்.

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ளது கோரே குந்தா என்ற கிராமம். இங்கு கோணிப்பை தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இதன் உரிமையாளர் சந்தோஷ். இந்த தொழிற்சாலையில் மேற்குவங்கம், பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை பார்த்துவந்தனர்.

மேற்குவங்கத்தை சேர்ந்தவர் மசூத். கரிமாபாத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் தங்கி வந்தார். இந்த சமயத்தில் லாக்டவுன் போடவும், ஃபேக்டரி மூடப்பட்டு விட்டது. அதனால் குடியிருந்த வீட்டுக்கு வாடகை தர முடியவில்லை. அதனால் சந்தோஷ் அந்த குடும்பத்தை தன்னுடைய குடோனிலேயே தங்க வைத்து கொண்டார். இந்த சமயத்தில்தான் அந்த குடும்பத்தையே திடீரென காணவில்லை என்று போலீசில் புகார் தந்தார் சந்தோஷ். போலீசாரும் விசாரணையை ஆரம்பித்தனர். அப்போதுதான், பேக்டரி பக்கத்திலேயே ஒரு கிணற்றில் சடலங்கள் மிதப்பதாக தகவல் வரவும் அங்கு சென்றனர். தண்ணீரில் மிதந்தபடி 4 சடலங்களை கிடந்தன. மசூத், அவரது மனைவி நிஷா, கணவரை பிரிந்து வாழ்ந்த அவரது மகள் புஸ்ரா, அவரது 3 வயது மகன் ஆகியோர் சடலங்கள்தான் அவை.

ஆனால், சடலங்களை மீட்ட மறுநாளே அதாவது கடந்த வெள்ளிக்கிழமை அதே கிணற்றில் மேலும் 5 சடலங்கள் மிதப்பதாக தகவல் வரவும் மீண்டும் சென்று மீட்பு பணியை தொடங்கினர். அப்போது மசூத் மகன் சபாக், பீகாரை சேர்ந்த தொழிலாளிகள் ஸ்ரீராம், ஷாம், திரிபுராவை சேர்ந்த ஷகீல் அகமது ஆகியோரின் உடல்களை கைப்பற்றினர். இப்படி ஒரே கிணற்றில் அடுத்தடுத்து 9 சடலங்கள் மிதந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை தந்தது.

பாழுங்கிணற்றில் மூழ்கி சாகும் அளவுக்கு தண்ணீர் இல்லாதததல் கொலையாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை ஆரம்பமானது. இவர்கள் சடலமாக மிதந்த முதல்நாள்தான், மசூத்தின் மகனுக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது தெரியவந்தது. இந்த பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு சஞ்சய் குமார் ஷா என்ற பீகாரை சேர்ந்தவரும் வந்திருக்கிறார். ஆனால், சடலங்கள் மிதந்த அன்று அவர் அந்த ஊரில் இல்லை. எனவே அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.. இறுதியில் அவரை கைதும் செய்தனர். அப்போதுதான் சஞ்சய் குமார் ஷா உட்பட 4 பேர் சேர்ந்து இந்த 9 பேரையும் கொன்றது தெரியவந்தது.

காரணம் மசூத் மகள் புஸ்ராதான். கணவனை பிரிந்து வாழும் இந்த பெண்ணுக்கு வயது 22 ஆகிறது. புஸ்ராவுக்கும் சஞ்சய்க்கும் ஏற்கனவே தொடர்பு இருந்துள்ளது.. ஆனால், மசூத் மகளை கண்டிக்கவும், சஞ்சய்யுடனான தொடர்பை புஸ்ரா கைவிட்டுவிட்டார். இந்த கோபத்தினால்தான் மசூத் குடும்பத்தையே மொத்தமாக காலி செய்ய சஞ்சய் துடித்தார். அதற்காக நண்பர்கள் 4 பேரை தயார் செய்தார். அந்த சமயத்தில்தான் புஸ்ரா மகனுக்கு பிறந்தநாள் வந்தது. பிறந்த நாள் நிகழ்ச்சியில், குழந்தைக்கு வாழ்த்து சொல்ல வந்தவர்கள், சர்க்கரை பொங்கல் சமைத்து சாப்பிட்டுள்ளனர். அங்கிருந்த கூல்டிரிங்ஸில் விஷத்தை கலந்து 9 பேருக்கும் தந்தனர். குடும்பமே அந்த விஷ ஜூஸை குடித்துவிட்டு மயங்கி விழுந்துள்ளது. இதன்பிறகுதான் அவர்களை தூக்கி கொண்டு போய் பக்கத்தில் உள்ள பாழுங்கிணற்றில் இரவில் தூக்கி போட்டுள்ளனர். இப்போது 4 பேருமே தற்போது கைதாகி உள்ளனர்.

பசியும், பட்டினியுமாக புலம்பெயர் தொழிலாளர்கள் தவித்து வரும் நிலையில், இப்படி ஒரே குடும்பத்தில் அப்பாவி குடும்பம் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்