Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

மே 26, 2020 11:07

சென்னை: “தமிழகத்தின் 17 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது,” என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் மேலும் தெரிவித்ததாவது:
தென்தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழை பெய்து வருகிறது. அது போல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் தென்மேற்கு பருவமழை எப்போதும் வேண்டுமானாலும் தொடங்கலாம். இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை மழை பெய்யக் கூடும்.

தமிழகத்தில்  திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும். புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அது போல் நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, குமரி ஆகிய மாவட்டங்களில் வரும் வெள்ளிக்கிழமை வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

அது போல் விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருந்த நிலையில் இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை மிதமான மழை பெய்யும். மீனவர்களுக்கு கடலுக்குள் செல்ல எந்தவித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. இவற்றை தவிர்த்து மற்ற இடங்களில் வெயில் வாட்டி வதைக்கும். சென்னையில் கடந்த சில தினங்களாக வெயில் குறைந்து காணப்படுகிறது. எனினும் அதிக அளவிலான புழுக்கம் காரணமாக மக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். நீர் சத்து குறையாமல் இருக்க நிறைய தண்ணீர், திரவ ஆகாரங்களை அருந்த வேண்டும்.

இவ்வாறு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்