Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேலாயுதம்பாளையத்தில் இருந்து சொந்த ஊருக்கு நடந்தே சென்ற பீகார் மாநில தொழிலாளர்கள்

மே 26, 2020 07:27

கரூர்: வேலாயுதம்பாளையத்தில் இருந்து சொந்த ஊருக்கு பீகார் மாநில தொழிலாளர்கள் நடந்தே சென்றனர்.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே மாங்காசோளியத்தில் பல்லவன் பாலிமார் என்ற பெயரில் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பிளாஸ்டிக் வாளிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உள்ளூர் தொழிலாளர்கள் 6 பேர் பீகார் மாநிலத்தை சேர்ந்த 14 பேர் வேலை செய்து வந்தனர். 

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் இவர்கள் வேலையில்லாமல் தவித்தனர். இதனால் அங்கு வேலை பார்த்த பீகார் மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குசெல்ல வேண்டும் என்று உரிமையாளரிடம் கூறினர். அவரும் அதற்கான ஏற்பாடுகள் செய்தார். இதையடுத்து புகளூரில் இருந்து 604 பீகார் மாநில தொழிலாளர்களை அழைத்து செல்லும்போது இவர்களையும் சேர்த்து அழைத்து செல்வதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது.

இதற்கிடையில் கடந்த 22-ந்தேதி பீகார் மாநில தொழிலாளர்கள் 604 பேரும் 16 பஸ்கள் மூலம் நாமக்கல் ரயில் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். ஆனால் 14 தொழிலாளர்களை அழைத்து செல்ல பஸ் வரும் என்று கூறியதை நம்பியிருந்தனர். இருப்பினும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பஸ் வரவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பின்னர் நாங்களே எங்கள் சொந்த ஊருக்கு செல்கிறோம் பணம் வேண்டும் என்று உரிமையாளரிடம் கேட்டு உள்ளனர். அதற்கு உரிமையாளர் பணம் எதுவும் தரமுடியாது என்று மறுத்து தொழிலாளர்களை வெளியே அனுப்பி விட்டு தொழிற்சாலையை பூட்டி விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த பீகார் மாநில தொழிலாளர்கள் தங்களது உடமைகளை எடுத்து கொண்டு பீகாருக்கு நடந்தே செல்ல முடிவு செய்தனர்.

இதையடுத்து அங்கிருந்து 14 தொழிலாளர்களும் தங்களது சொந்த ஊருக்கு நடந்தே சென்றனர்.

தலைப்புச்செய்திகள்