Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரடங்கு தளர்வினால் டெல்லியில் அதிகரித்த கொரோனா பாதிப்பு: கெஜ்ரிவால்

மே 25, 2020 11:55

புதுடெல்லி: ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்றால் டில்லியில் இதுவரை 13,418 பேர் பாதிக்கப்பட்டு, 261 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் ஊரடங்கு காலத்தில் தளர்வுகள் அறிவித்ததால், பல இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்தது. இந்நிலையில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காணொலி மூலமாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனாலும், இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தாலும் டில்லியில் நிலைமை கட்டுக்குள் உள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. அவர்கள் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்தவகையில் மொத்தம் 3,314 பேர் வீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டில்லியில் மொத்த பாதிப்பில் 6,540 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 6,617 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா சிகிச்சைக்காக இன்று முதல் தனியார் மருத்துவமனைகளில் 2,000 புதிய படுக்கைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் அனைவரும் நலம் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்