Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தப்லீக் மாநாட்டிற்கு பின், இந்தியாவில் கொரோனா நோயாளிகள் அதிகரித்தது அதிர்ச்சி: ஹர்ஷ்வர்தன்

மே 25, 2020 08:35

புதுடெல்லி: டெல்லி நிஜாமுதீன் தப்லீக் ஜமாத் சம்பவத்துக்குப் பின், கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது இந்தியாவுக்கே அதிர்ச்சியாக இருந்தது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், காணொலி மூலம் பாஜக செய்தித்தொடர்பாளர் ஜிபிஎல் நரசிம்ம ராவுடன் கலந்துரையாடினார். அப்போது இந்தியாவில் கொரோனா நோயாளிகள் அதிகரித்ததற்கும், டெல்லி நிஜாமுதீன் தப்லீக் ஜமாத் சம்பவத்துக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா எனக் கேட்டார்.

அதற்கு மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது:

''டெல்லி நிஜாமுதீன் தப்லீக் ஜமாத் மதவழிபாடு மாநாட்டைப் பற்றி நிறைய விவாதித்துவிட்டோம். அந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து சிகிச்சையளித்து குணப்படுத்திவிட்டோம்.

அந்தச் சம்பவம் நடந்தபோது, அனைத்து மாநில அரசுகள், தகவல் தொழில்நுட்பத் துறை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் முக்கியப் பங்காற்றி செயல்பட்டதால்தான் அனைவரும் கண்டுபிடிக்க முடிந்தது.

அந்தச் சம்பவத்தை நினைத்தாலே வருத்தமாக இருக்கிறது. மார்ச் 2-வது வாரத்தில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிய நேரம், இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்தது. அனைத்து மாநிலங்களிலும் சில நூறுகளில் மட்டுமே கொரோனா நோயாளிகள் இருந்தார்கள். அப்போதுதான் துரதிருஷ்டவசமாக, பொறுப்பற்ற இந்தச் சம்பவம் நடந்தது.

டெல்லியில் மார்ச் மாதத்தில் அதிகபட்சம் 15 நபர்களுக்கு மேல்கூடுவதற்குத் தடை இருந்தபோது, 18 நாடுகளைச் சேர்ந்தவர்கள் வந்து டெல்லி நிஜாமுதீன் மத மாநாட்டில் பங்கேற்றனர்.

வெளிநாட்டிலிருந்து அந்த மாநாட்டுக்கு வந்தவர்கள் கொரோனா நோயைச் சுமந்து வந்துள்ளனர். தப்லீக் ஜமாத்தில் ஏறக்குறைய ஆயிரம் பேருக்கு மேல் தங்கியிருந்தது அதிகாரிகளுக்குக் கூடத் தெரியவில்லை. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தபின் அங்கிருந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர், பலர் தாங்களாகவே சென்றனர்.

அந்தச் சம்பவம் நடக்காதவரை கொரோனா நோயாளிகள் அதிக அளவில் இல்லை. அந்தச் சம்பவத்துக்குப் பின் நாட்டில் கொரோனா நோாளிகள் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது அதிர்ச்சியாக அமைந்தது. அதன்பின்புதான் லாக்டவுனையும் மற்ற நடவடிக்கைகளையும் மத்திய அரசு தீவிரப்படுத்தியது.

அது துரதிஷ்டவசமான சம்பவம்தான். நாடு ஒட்டுமொத்தமாக ஒரு முடிவு எடுக்கும்போது, ஒவ்வொருவரும் அதைப் பின்பற்றி ஒழுக்கமாக, அனைவரின் நலனுக்காக நடக்கவேண்டும். தப்லீக் ஜமாத் சம்பவம் நாட்டில் உள்ள அனைத்து சமூகத்துக்கும் ஒரு பாடமாகும்''.

இவ்வாறு ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்