Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தகவல் இல்லாமல் மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா குற்றச்சாட்டு

மே 25, 2020 07:07

புவனேஸ்வர்: எந்தவித முன் தகவலும் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும், இதனால் புலம்பெயர்ந்தோரின் விவரங்கள் தெரியாமல் அவர்களுக்கான ஏற்பாடுகளை செய்வதில் சிக்கல் ஏற்படுவதாகவும் ஒடிசா மாநில சிறப்பு நிவாரண கமிஷனர் கூறினார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால், வெளிமாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். இவர்களுக்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்க மத்திய அரசும், ரயில்வேத்துறையும் முடிவு செய்து புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வருகிறது. அதன்படி, மே 3ம் தேதி முதல் 2,55,404 புலம்பெயர் தொழிலாளர்கள் ஒடிசா மாநிலத்திற்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், மத்திய அரசு மீது, ஒடிசா மாநில சிறப்பு நிவாரண கமிஷனர் பி.கே.ஜெனா குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: மத்திய அரசு, முன்பெல்லாம் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களின் புறப்பாடு மற்றும் வருகை குறித்த விவரங்களை மாநில அரசுடன் பகிர்ந்து கொண்டது. ஆனால், இப்போது எந்தவித முன் தகவலும் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் மாநிலத்திற்கு திரும்பும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை மாநில அரசு அறிந்து கொள்வது கடினமாக உள்ளது. இதனால், மாநிலத்திற்கு வருகைத்தருவோருக்கான ஏற்பாடுகளை செய்வதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தாங்கள் ஏறிய ரயில் மற்றும் அவர்கள் வந்த நேரம், இடம் குறித்த விவரங்களை வழங்குமாறு மாநில அரசு கேட்டுக்கொள்கிறது. இதனால் அவர்களை அந்தந்த இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய முடியும். ஒடிசாவுக்குத் திரும்பும் புலம்பெயர்ந்தோரின் டிக்கெட் கட்டணத்திற்காக மாநில அரசு ரயில்வேக்கு ரூ.55.5 கோடியை வழங்கியுள்ளது. முன் தகவல் இல்லாமல் திரும்பும் மக்கள், இலவச டிக்கெட் வசதியைப் பெறுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்