Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் மோடி வென்ற தொகுதியை காலி இடமாக அறிவிக்க கோரி வழக்கு

மே 23, 2020 06:49

புதுடெல்லி : பிரதமர், நரேந்திர மோடி வென்ற வாரணாசி தொகுதியை, வெற்றிடமாக அறிவிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, இரு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்ட, உ.பி.,யின் வாரணாசி தொகுதியில், அவரை எதிர்த்து, பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படையின் முன்னாள் வீரர், தேஜ் பகதுார் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மனுவை, தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர்.

இதை எதிர்த்து, அவர் தாக்கல் செய்த மனுவை, அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, தேஜ் பகதுார் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த, 2019ல், நாடு முழுதும் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், உ.பி.,யின் வாரணாசி தொகுதியில் என் வேட்பு மனு, தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை, விதிகளை முறையாக பின்பற்றாமல் எடுக்கப்பட்டுள்ளது.இதை எதிர்த்து நான் தாக்கல் செய்த மனுவை, போட்டியிடும் தொகுதியில், நான் வசிக்கவோ அல்லது வேட்பாளராகவோ இல்லை என கூறி, அலகாபாத் உயர் நீதிமன்றம், மே, 9ல், தள்ளுபடி செய்தது.'நாட்டின் குடிமகன், எந்த தொகுதியிலும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்' என, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, உயர் நிதிமன்றத்தால் கவனிக்கப்படவில்லை. என் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது, தேர்தல் விதிகளுக்கு எதிரானது என்பதுடன், தேர்தல் பிரதிநிதித்துவ சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளது என்பதையும், உயர் நீதிமன்றம் கவனிக்க தவறிவிட்டது.எனவே, பிரதமர் வெற்றி பெற்ற வாரணாசி தொகுதியை, காலி இடமாக அறிவிப்பதுடன், என் வேட்பு மனுவை, தேர்தல் அதிகாரி நிராகரித்ததை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையில், நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வின் முன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என, மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, இரண்டு வாரங்களுக்குப் பின், இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்படும் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தலைப்புச்செய்திகள்