Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விற்பனை செய்ய முடியாமல், குப்பையில் கொட்டப்படும் பூக்கள்

மே 21, 2020 07:04

புதுக்கோட்டை: கொரோனா ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டாலும் கீரமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உற்பத்தியாகும் பூக்களை விற்பனை செய்ய முடியாமல் குப்பையில் கொட்டும் நிலை தொடர்கிறது.

மதுரை திருச்சி மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், செரியலூர், பனங்குளம், குளமங்கலம், கொத்தமங்கலம், மேற்பனைக்காடு, நெய்வத்தளி, பாண்டிக்குடி, அணவயல், மாங்காடு, வடகாடு, திருவரங்குளம், மழையூர், அரசடிப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் 50 கிராமங்களில் மல்லிகை கனகாம்பரம் முல்லை காட்டுமல்லி அரளி செண்டி சம்பங்கி ரோஜா உள்ளிட்ட பூக்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. 

அதாவது ஒரு நாளைக்கு சுமார் 15 டன் வரை பூ உற்பத்தி செய்யப்பட்டு கீரமங்கலம் பூ கமிஷன் கடைகளுக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. கீரமங்கலம் பூ கமிஷன் கடைகளில் இருந்து பல மாவட்டங்களுக்கும் பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தொடர்ந்து பூக்களை பறிக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டனர். சுப நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், துக்க நிகழ்ச்சிகள் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால் மொத்த உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொடுக்கப்பட்டிருந்தாலும். அனைத்து நிகழ்ச்சிகளும் இல்லாததாலும், பொதுமக்கள் பூக்கள் வாங்குவது நடைபெறாததாலும் கமிஷன் கடைகளுக்கு விவசாயிகள் கொண்டு வரும் பூக்களை விற்பனை செய்ய முடியாமல் பொது இடங்களிலும், கோவில் வாசல், சாலை ஓரங்கள் குப்பைகளிலும் கொட்டி வருவது தொடர்கிறது. 

இதனால் தொடர்ந்து விவசாயிகள் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் பூ உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்