Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கூட்டமும் இல்லை.. விற்பனையும் இல்லை: காத்து வாங்கும் தமிழக டாஸ்மாக் கடைகள்

மே 20, 2020 02:37

திருச்சி: டாஸ்மாக் கடைகள் மூலம் கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் 163 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனையான நிலையில் அடுத்த நாளே ஒரளவு வசூல் ஆனது. ஆனால், அதன்பிறகான நாட்களில் கூட்டம் இல்லை. வசூலும் இல்லை. டாஸ்மாக் கடைகள் அனைத்தும் காத்துவாங்குகின்றன. இதனால் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட போலீஸார் தேவையின்றி வெயிலில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மதுக்கடைகள் 41 நாட்களுக்கு பிறகு மே 7ம் தேதி திறக்கப்பட்டதால் குடிமகன்கள் பல கிலோமீட்டர் நீளததிற்கு வரிசையில் நின்று மதுவாங்கினர். 8ம் தேதியும் மதுக்கடைகளில் பெரிய அளவில் கூட்டம் இருந்தது. இந்த இரு நாளில் மட்டும் சுமார் 280 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மதுபானங்கள் விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் 9ம் தேதி முதல் சுமார் ஒரு வாரம் மூடப்பட்டன. அதன்பிறகு உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததால் மே 16ம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் மே 16ம் தேதி ஒரு நாளில் மட்டும் 163 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகின. அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை ஓரளவு கூட்டம் இருந்தது. வசூலும் இருந்தது. ஆனால், திங்கள்கிழமைக்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. டாஸ்மாக்கில் மதுவாங்க யாரும் வராததால் பல கடைகள் காத்துவாங்கின. பல கடைகளுக்கு குடிமகன்கள் செல்லாததால் டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இந்த சூழலில் நேற்று ஒரு நாளில் 91.5 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிகபட்சமாக திருச்சி மண்டலததில் 23 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனையானதாக தெரிகிறது. இனி வரும் நாட்களில் வழக்கம் போல் சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் மட்டுமே மதுபானங்கள் அதிகம் விற்பனையாக வாய்ப்புள்ளது.

தற்போதைய நிலையில் மக்களிடம் பணபுழக்கம் குறைந்துவிட்டதால் தான் தற்போது டாஸ்மாக் கடைகளில் கூட்டம் இல்லை. இருக்கிற பணத்தை முதல் இரண்டு நாளிலேயே குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளில் போய் கொட்டிவிட்டதால் இனி வேலை செய்தால் தான் மதுவாங்க கூட போக முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதும் என்பதாலும், சமுக இடைவெளி இல்லாமல் போய்விடும் என்பதால் ஒரு கடைக்கு 3க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது டாஸ்மாக் கடைகளில்  கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுவதால் போலீஸார் தேவையின்றி ஒரு ஓரமாக கடையை பார்த்தபடி அமர்ந்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்