Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுபாட்டில்கள் இருப்பு இல்லாததால் மதுப்பிரியர்கள் விரக்தி: கூட்டத்தை விரட்டியடித்த போலீசார்

மே 18, 2020 10:46

நாகை: திருக்கடையூரில் உள்ள மதுக்கடையில் மது பாட்டில்கள் இருப்பு இல்லாததால் மதுப்பிரியர்கள் விரக்தி அடைந்தனர். கூட்டத்தை போலீசார் விரட்டியடித்தனர்.

தமிழகத்தில் சென்னை தவிர மற்ற இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்தநிலையில் நாகை மாவட்டம் திருக்கடையூரில் மதுக்கடை முன்பு மதுப்பிரியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் மது பாட்டில்கள் வாங்க காத்திருந்தனர். நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் திருக்கடையூர் உள்ளிட்ட சில இடங்களில் மதுக்கடைகளில் மது பாட்டில்கள் இருப்பு இல்லாததால் காலை 10 மணியாகியும் மதுக்கடைகள் திறக்கவில்லை. இதனால் கடை முன்பு ஏராளமானோர் கூடி இருந்தனர்.

அப்போது அங்கு வந்த மதுக்கடை மேற்பார்வையாளர் பாதுகாப்பு பணியில் இருந்த பொறையாறு போலீசாரிடம் மதுக்கடையில் மது பாட்டில்கள் இருப்பு இல்லை என்று தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு கூடியிருந்த மதுப்பிரியர்களிடம் மது பாட்டில்கள் இருப்பு இல்லை என்ற தகவலை தெரிவித்தனர். இதனால் அங்கு கூடியிருந்த மதுப்பிரியர்கள் விரக்தி அடைந்தனர்.

பின்னர் போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் அவர்கள் யாரும் கலைந்து செல்லாமல் அங்கேயே கூட்டமாக நின்றனர். இதனால் போலீசார் அவர்களை விரட்டியடித்து கூட்டத்தை கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

தலைப்புச்செய்திகள்