Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவுக்கு வென்டிலேட்டர் வழங்கும் அமெரிக்கா: டிரம்புக்கு மோடி நன்றி

மே 17, 2020 07:03

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவல் துவங்கியபோது, அமெரிக்காவுக்கு மருந்துகளை அனுப்பி உதவியதற்கு பிரதிபலனாக, இந்தியாவுக்கு, 'வென்டிலேட்டர்' சாதனங்களை அனுப்புவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். இதற்கு, மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல், அமெரிக்காவில் தீவிரமாக இருந்தபோது, மலேரியாவுக்கு வழங்கப்படும், 'ஹைட்ராக்சிக்ளோரோக்வின்' மருந்து பலனளிப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.அந்த மருந்தை அளிக்கும்படி, பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் கேட்டுக் கொண்டார். அதையடுத்து, இந்த மருந்தின் ஏற்றுமதிக்கான தடை விலக்கி கொள்ளப்பட்டு, அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், 'கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக, இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம். அவர்களுக்கு உதவுவதற்காக, வென்டிலேட்டர் சாதனத்தை அனுப்பி வைப்போம்' என, டிரம்ப் கூறியுள்ளார்.இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அடுத்த மூன்று வாரங்களுக்குள், 200 வென்டிலேட்டர் சாதனங்கள் இந்தியாவுக்கு வர உள்ளதாகவும், அதற்காக, 7.58 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.டிரம்பின் இந்த அறிவிப்பை, பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். 'மிக்க நன்றி. இந்த வைரசுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்' என, சமூக வலை தளத்தில், அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்