Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரடங்கால் சானை பிடித்தல், அரிவாள்மனை விற்பனை தொழில் பாதிப்பு

மே 16, 2020 06:39

புதுக்கோட்டை: ஊரடங்கால் சானை பிடித்தல் அரிவாள் மனை விற்பனை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாய், கூடைகள், ஓலை பெட்டிகள் தயாரிப்பு போன்ற கை தொழில்களுடன் அரிவாள்மனை அரிவாள் போன்ற சிறு சிறு உபகரணங்களும் தயாரித்து சைக்கிள்கள் மற்றும் தலைச்சுமையாக தொழிலாளர்கள் கிராமங்களில் கூவி கூவி விற்பனை செய்து வந்தனர். 

மேலும் இவர்கள் வருமானத்திற்காக சைக்கிள்களிலேயே தயாராக வைத்திருக்கும் சானை பிடிக்கும் மிஷின்கள் மூலம் கத்திரிக்கோல் சிறிய கத்திகளை கூர்தீட்டி கொடுத்து வாழ்க்கை நடத்தினார்கள்.

இந்த நிலையில் தற்போது கடந்த 40 நாட்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சானை பிடிக்கும் தொழிலாளர்கள் அரிவாள் மனை விற்பனை செய்யும் தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக கிராமங்களில் தொழிலுக்காக வந்தும் வேலை கிடைக்காமல் விரக்தியடைந்து செல்கின்றனர்.

இதுகுறித்து கீரமங்கலம் பகுதிக்கு வந்த ஒரு சானை பிடிக்கும் தொழிலாளி கூறுகையில்; ஆலங்குடியில் இருந்து காலை புறப்பட்டால் மதியத்திற்குள் பல சலூன்கடைகளில் கத்திரிக்கோல்களுக்கு சானை பிடித்து விடுவோம். அதே போல வீடுகளில் உள்ள அரிவாள்மனை, கத்தி போன்றவைகளுக்கும் சானை பிடித்து வருமானம் பெற்றோம். 

ஆனால் இப்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் நாங்களும் 40 நாட்களாக வெளியில் செல்லாமல் வீட்டில் முடங்கி கிடந்தாலும் உணவுக்காக வேலை செய்ய வேண்டிய நிலையில், சில நாட்களாக ஊர் ஊராக சென்றால் யாரும் வேலை கொடுப்பதில்லை. சலூன் கடைகளும் திறக்கவில்லை. கிராமங்களில் எங்களை பார்த்ததும் கொரோனா முடியட்டும் அப்புறம் சானை பிடித்துக் கொள்கிறோம் என்று கூறி விடுகிறார்கள். இதனால் வருமானமும் இல்லை என்றார்.

தலைப்புச்செய்திகள்