Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமருக்கு எதிராக சிலரை ஏவி விட்டு கொச்சையாக பேச வைக்கும் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: எச்.ராஜா

மே 15, 2020 04:56

சிவகங்கை: பிரதமருக்கு எதிராக சிலரை ஏவி விட்டு கொச்சையாக பேச வைக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜ., தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜ., தேசிய செயலர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொருளாதாரத்தில் அ, ஆ தெரியாதவர் ப.சிதம்பரம். அவர் சொன்ன கருத்துக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. 14 நாடுகளில் சொத்து வைத்திருக்கும் அவருக்கு இந்தியாவை பற்றி எதுவும் தெரியாது. 24 ஆண்டுகளாக மதுவிலக்கு மாநிலமாக இருந்த தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றியது திமுக தான். 2016 தேர்தலில் அதிமுக படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவதாக தெரிவித்திருந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆசையை தற்போதைய அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நமது மருத்துவ வல்லுனர்களின் முயற்சியால் 60 நாட்களுக்குள் கொரானாவிற்கான மருந்து கண்டுபிடிக்கப்படும். கொரானவிற்கு எதிராக மட்டும் நாம் கவனம் செலுத்த வேண்டும். சிறு, சிறு பிரச்சனைகளை கண்டு கொள்ள கூடாது. ஒரே நாடு, ஒரே ரேஷன் என்பதை எதிர்த்த திமுக போன்ற கட்சிகள் மக்களின் நலனில் அக்கறை இல்லாதவர்கள். மக்கள் எப்போதும் துன்பத்திலேயே இருக்க வேண்டும் என நினைப்பவர்கள். ஸ்டாலின் பிரதமருக்கு எதிராக மோசமான செயல்பாட்டை கையில் எடுத்து வருகிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். சிலரை ஏவி விட்டு கொச்சையாக பிரதமரை தாக்கி பேச வைக்கும் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்