Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாநகரில் திறந்த கடைகளை மூடிய காவல் துறையினா்: வியாபாரிகள் வாக்குவாதம்

மே 14, 2020 05:28

திருச்சி: திருச்சி கோட்டை பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்ததால் அங்கு திறந்திருந்த கடைகளை மூட காவல் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டனா்.
பொது முடக்கக் காலத்தில் சில தளா்வுகளை அரசு வழங்கியதால் கடந்த 11- ம் தேதி முதல் 34 வகையான தொழில் நிறுவனங்கள் கடைகள் திறக்கப்பட்டன.

இங்கு சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் முகக்கவசம் அணிந்து வருதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாத கடைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருச்சி கோட்டை பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் புதன்கிழமை அதிகளவில் இருந்ததால் நோய்த் தொற்றுப் பரவும் அபாயம் ஏற்படலாம் என அஞ்சிய காவல்துறையினா் சிறிய அளவிலான ஜவுளிக் கடைகளையும் இதரக் கடைகளையும் மூடினா்.

இதையடுத்து வியாபாரிகள் கோட்டை காவல் நிலையத்தில் திரண்டு வந்து விளக்கம் கேட்டனா். பொதுமக்கள் அதிகளவில் கூடும் வகையில் ஜவுளிக்கடைகள் மட்டுமின்றி எந்த கடைகளையும் திறக்க அரசு அனுமதியளிக்கவில்லை.

இதனால் கடைகளைத் திறக்க அனுமதிக்க முடியாது என காவல்துறையினா் தெரிவித்தனா். தொடா்ந்து வியாபாரிகள் கடைகளைத் திறக்காமல் திரும்பிச் சென்றனா்.
இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கூறுகையில் விதிமுறைகளின் படி கடைகளைத் திறக்க அரசு அனுமதியளித்திருந்தாலும் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் வகையில் கடைகளைத் திறக்க காவல்துறையினா் அனுமதியளிக்கவில்லை.

குறிப்பாக திருச்சி என்எஸ்பி சாலையில் குறுகலான பகுதிகளில் கூட அதிகளவில் கடைகள் உள்ளன. எனவே தொற்றுப் பரவுதலைக் கட்டுப்படுத்தும் வகையில்தான் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்

தலைப்புச்செய்திகள்