Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உலகிலேயே மிகப்பெரிய பொருளாதார மீட்பு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்: பா.ஜ., தலைவர் நட்டா பாராட்டு

மே 13, 2020 06:08

புதுடெல்லி: 'உலகிலேயே மிகப்பெரிய பொருளாதார மீட்பு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்' என பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, பொருளாதார மேம்பாட்டுக்காக, 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவித்தார். மேலும், இதற்கான திட்டங்களை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று(மே 13) முதல் அறிவிக்க உள்ளதாக கூறினார். அவரது அறிவிப்புக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

பிரதமர் அறிவிப்பு குறித்து, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறுகையில், 'உலகிலேயே மிகப் பெரிய பொருளாதார மீட்பு திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 21ம் நுாற்றாண்டில், உலக நாடுகளை, இந்தியா வழி நடத்தி செல்லும். அந்த வகையில், கொரோனா வைரஸ் மீட்பு நடவடிக்கைகளில் அவர், நாட்டு மக்களை முன்னின்று நடத்தி வருகிறார்' என்றார்.

ம.பி., முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறுகையில், 'பிரதமர் அறிவித்துள்ள, 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார திட்டம், நம் நாட்டை சுய சார்புடையதாக மாற்றும் மிக முக்கியமான நடவடிக்கை. பொருளாதாரத்தை மேம்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தால், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன் அடைவர். என்றார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு இயக்குனர் ஜெனரல் சி.பானர்ஜி கூறுகையில், 'கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த நெருக்கடியான நேரத்தில், பிரதமர் மோடி, இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில், மிகப் பிரமாண்டமான பொருளாதார சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த நெருக்கடி நிலையை நாடு எதிர்கொள்வதற்கு, இந்தத் திட்டம் மிகவும் உதவியாக இருக்கும். 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம், நம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் பயணிப்பதற்கு பெரிதும் உதவும்' என்றார்.

தலைப்புச்செய்திகள்