Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் 3 ஜோடிக்கு இலவச திருமணம்: சீர்வரிசை பொருட்கள் வழங்கிய ஸ்டாலின்

மே 11, 2020 03:17

சென்னை: சென்னை துறைமுகம் பகுதியில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்த மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சீர்வரிசைப் பொருட்களையும் கொடுத்து வாழ்த்தினார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் வெளிநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்து வந்த மு.க.ஸ்டாலின், நேற்று 3 ஜோடிகளின் திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைத்துள்ளார். சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேகர்பாபு தனது துறைமுகம் தொகுதியில் இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகளை எளிமையாக செய்திருந்தார். சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் மணமக்களின் பெற்றோர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இதேபோல், ராஜா அண்ணாமலை மன்றத்தில் அர்ச்சகர்கள் 70 பேருக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை ஸ்டாலின் வழங்கினார். மேலும், அவர்களுக்கு நோய் தடுப்பு உபகரணங்கள், நிதியுதவியும் செய்தார். அதைத் தொடர்ந்து ரத்ததானம் வழங்கிய தி.மு.க.வினர், தன்னார்வலர்கள் 126 பேருக்கு சமூக விலகலை கடைபித்து சான்றிதழ் வழங்கிய ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

அங்கிருந்து திரு.வி.க.நகர் தொகுதிக்கு சென்ற மு.க.ஸ்டாலின் முடி திருத்தும் தொழிலாளர்கள் 160 பேருக்கு 15 வகையான அத்தியாவசிய பொருட்களை அளித்தார். இதேபோல், தனது தொகுதியான கொளத்தூரில் 900 தூய்மை பணியாளர்களுக்கு தலா 5 கிலோ அரிசி, போர்வை, புது தட்டு, டம்ளர் உள்ளிட்ட பொருட்களை மு.க ஸ்டாலின் வழங்கினார்.

இதேபோல், செவிலியர்கள், கழிவுநீர் அகற்றும் தொழிலாளர்கள், உள்ளிட்டோருக்கு சானிடைஸர், என்.95 முகக்கவசம், சோப்பு உள்ளிட்ட பொருட்களை ஸ்டாலின் வழங்கினார். வீட்டில் இருந்தவாறே காணொலி மூலம் கட்சி நிர்வாகிகளுடன் உரையாற்றி வந்த ஸ்டாலின் நேற்று சென்னை மாநகரத்திற்குள் 3 தொகுதிகளுக்கு விசிட் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்