Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

6 இன்ஸ்பெக்டர்களுக்கு கொரோனா உறுதி: சென்னையில் ஒரே நாளில் அதிர்ச்சி தகவல்

மே 11, 2020 02:58

சென்னை: சென்னையில் நேற்று ஒரே நாளில் 6 காவல் ஆய்வாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் களப்பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கும் கொரோனா தொற்றி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மட்டும் சென்னையில் ஒரு பெண் காவல் ஆய்வாளர் உள்பட 6 காவல் ஆய்வாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவில் வேலை பார்க்கும் காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் இரண்டு பெண் உதவி ஆய்வாளர்களுக்கும் கொரோனா உறுதியானது. இது தவிர சாத்தாங்காடு காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர், மணலி புதுநகர் காவல் ஆய்வாளர், முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளர், எண்ணூர் காவல் ஆய்வாளர், மதுரவாயல் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஆகிய 6 பேருக்கும் ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் இரண்டு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு ஊர்க்காவல் படையினருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அது போல் சென்னை மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையத்தில் உள்ள அறையில் 40 ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

இங்கு தங்கியிருந்த 29 வயதான ஆயுதப்படை காவலருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து மற்ற 39 காவலர்களுக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில், 4 பேருக்கு கொரோனா உறுதியாகி அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் தொடர்ச்சியாக போலீஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று பரவி வருவதால் போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்