Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தஞ்சை அருகே போலீஸ்காரர் வீட்டை அடித்து நொறுக்கிய 6 பேர் கைது

மே 11, 2020 09:17

தஞ்சை: தஞ்சை அருகே மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடாததால் ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரர் வீட்டை அடித்து நொறுக்கிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 7 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

தஞ்சையை அடுத்துள்ள பழைய கல்விராயன்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் வினோத் (25). தஞ்சை ஆயுத படையில் போலீஸ்காரராக உள்ள இவர் வல்லம் போலீஸ் நிலைய சரகத்தில் தற்போது கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று வினோத் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். 

பழைய கல்விராயன்பேட்டை ரயில்வே கேட் அருகே வந்தபோது அவருக்கு முன்னால் ஆலக்குடியை சேர்ந்த 5 வாலிபர்கள் சரக்கு ஆட்டோவில் காய்கறிகளை ஏற்றி சென்றுள்ளனர். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிளுக்கு அவர்கள் வழிவிடவில்லை என தெரிகிறது. இதனால் 5 பேருக்கும் போலீஸ்காரர் வினோத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த வினோத்தின் அண்ணன் லோகேந்திரன் சம்பவ இடத்துக்கு வந்து லோடு ஆட்டோவில் வந்த வாலிபர்களை தாக்கியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அந்த 5 வாலிபர்களும் அங்கிருந்து ஆலகுடிக்கு சென்று தங்கள் ஆதரவாளர்களுடன் வந்து பழையகல்விராயன்பேட்டை தெற்கு தெருவில் உள்ள வினோத்தின் வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடினர். 

இதில் வீட்டின் கதவு, ஜன்னல், வீட்டு உபயோக பொருட்கள் சேதம் அடைந்தன. சம்பவ இடத்திற்கு வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன் கள்ளப்பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் சப்-இன்ஸ்பெக்டர் அபானா அஞ்சும் மற்றும் போலீசார் வந்து பார்வையிட்டனர்.

இதுகுறித்து வினோத்தின் தந்தை ராசு கொடுத்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீசார் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஆலக்குடியை சேர்ந்த பூபதி(21), சந்தோஷ்(19), சிலம்பரசன்(22), ரஞ்சித்குமார்(22), ராம்ஜெயந்த்(21), சக்திவேல்(22) ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் 7 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதேபோல பூபதி கொடுத்த புகாரின் பேரில் போலீஸ்காரர் வினோத் மற்றும் அவரது அண்ணன் லோகேந்திரன் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பழையகல்விராயன்பேட்டை கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்