Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மலேசியாவில் இருந்து திருச்சி வந்த 177 பயணிகள் சிறப்பு முகாமில் தங்கவைப்பு

மே 11, 2020 08:50

திருச்சி: சிறப்பு விமானம் மூலம் மலேசியாவில் இருந்து திருச்சி வந்த 177 பயணிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்காக சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தவித்துக்கொண்டிருந்த இந்தியர்களில் 178 பேர் சிறப்பு விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். திருச்சி விமான நிலையத்தில் அவர்களுக்கு முழு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா வைரஸ் நோய் அறிகுறி இல்லை.

ஒருவர் மட்டும் சிறுநீரக கோளாறு தொடர்பான சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மற்றவர்கள் மத்திய சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின்படி 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்காக சிறப்பு முகாம்களுக்கு 6 சிறப்பு பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் 117 பேர் சேதுராப்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியிலும் மற்ற 60 பேர் திருச்சியில் உள்ள பல்வேறு தங்கும் விடுதிகளிலும் தங்க வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக சிறப்பு விமானத்தில் வந்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததை மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சுப்பிரமணி, ஆர்.டி.ஓ. விஸ்வநாதன், பொன்மலை உதவி ஆணையர் தயாநிதி, மாநகராட்சி நகர்நல அதிகாரி டாக்டர் ஜெகநாதன், திருச்சி கிழக்கு தாசில்தார் மோகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் சேதுராபட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி விடுதிக்கு சென்று கலெக்டர் எஸ்.சிவராசு ஆய்வு மேற்கொண்டார்.

தலைப்புச்செய்திகள்