Sunday, 16th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்: ஒரு உயிரை காக்க கேரளாவில் நடந்த போராட்டம்

மே 10, 2020 02:52

திருவனந்தபுரம்: கேரளாவில் மூளை சாவு அடைந்த கேரளாவை சேர்ந்த பெண் லலி கோபகுமார் இதயம் வேறு ஒருவருக்கு அவசர அவசரமாக பொருத்தப்பட்ட நிகழ்வு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

கேரளா மாநிலம் செம்பழந்தி பகுதியை சேர்ந்தவர் லலி கோபகுமார். 50 வயதான இவர் செம்பழந்தி பகுதியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த ஒரு வருடமாக aneurysm எனப்படும் மோசமான நோய் ஏற்பட்டு இருந்தது. இதனால் இவரின் தமனி குழாய்கள் விரிவடைந்து கொண்டு சென்றது. இவரின் உடல்நிலை கடந்த வாரம் மோசமடைந்தது. இதையடுத்து திருவானந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் இவர் சேர்க்கப்பட்டார். 

அங்கு தீவிரமாக சிகிச்சை பெற்றவருக்கு திடீரென்று உடல் மோசமாகி மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டது. இதனால் சில நிமிடத்தில் அவர் மூளை சாவு அடைந்தார். அவரின் உடல் உறுப்புகள் மட்டும் இயங்கி கொண்டு இருந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடியுமா? என்று மருத்துவர்கள் கேட்டுள்ளனர். அதற்கு லலி கோபகுமாரின் குடும்பத்தினர் உடனே ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள்.

இதையடுத்து அந்த பெண்ணின் இதயம் யாருக்காவது கேரளாவில் பொருந்துகிறதா? என்று சோதனை செய்துள்ளனர். அப்போது கொச்சியில் 50 வயது பெண் ஒருவருக்கு அவசரமாக இதயம் தேவைப்பட்டு இருக்கிறது. அவருக்கு லலியின் இதயம் பொருந்தி உள்ளது. இதயம் பெற்ற அந்த பெண் கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர். இவருக்கு கடந்த ஒரு வருடமாக இதயத்தில் பிரச்சனை இருந்துள்ளது.

இதையடுத்து அரசின் உடல் உறுப்பு தானத்திற்காக தளத்தில் தன்னுடைய பெயரை பதிவு செய்துவிட்டு உறுப்புக்காக அவர் காத்து இருந்துள்ளார். இந்நிலையில்தான் லலி இறக்கவே அவரின் இதயம் இந்த பெண்ணுக்கு பொருந்தி உள்ளது. நேற்றுமுன்தினம் மாலை திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளம் கொண்டு செல்லப்படலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், ஆம்புலன்சில் சென்றால் 4 மணி நேரம் ஆகும். சரியாக அங்கு 3.05 மணிக்கு லலியின் இதயம் வெளியே கொண்டு வரப்பட்டது. 1 மணி நேரத்தில் இதயத்தை கொண்டு செல்ல வேண்டும் என்ற கட்டாயம்.

இதனால் காரை பயன்படுத்த முடியாது. இதற்காக அம்மாநில அரசு ஹெலிகாப்டரை பயன்படுத்தி உள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து 3.05க்கு புறப்பட்ட ஹெலிகாப்டர் 3.55க்கு எர்ணாகுளம் சென்றுள்ளது. அங்குள்ள ஹயாத் ஹோட்டலில் 3.55க்கு ஹெலிகாப்டர் இறங்கி உள்ளது.
அதன்பின் 5 நிமிடத்தில் காரில் இதயம் மாலை 4 மணிக்கு லிசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உடனே 4.10 மணிக்கே அந்த பெண்ணுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு ஹெலிகாப்டரை பயன்படுத்துவது இதுவே முதல்முறையாகும்.

வெறும் ஒரு மணி நேரத்தில் இந்த இதயத்தை அவர்கள் கொண்டு சென்று இருக்கிறார்கள். மற்ற மாநிலங்கள் உடல் உறுப்புகளை எடுத்து செல்ல காரை பயன்படுத்தும் போது கேரளா ஹெலிகாப்டரை பயன்படுத்தி உள்ளது. திருவனந்தபுரம் போலீஸ் இந்த ஹெலிகாப்டரை சில வாரங்களுக்கு முன் 1.5 கோடி ரூபாய்க்கு வாங்கிய போது நிறைய விமர்சனங்கள் வந்தது. ஆனால், அதை முறியடிக்கும் வகையில் தற்போது அந்த ஹெலிகாப்டர் பயன்பட்டுள்ளது.

இது தொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டிவிட் செய்துள்ளதாவது:
லலி கோபகுமார் கொடுத்த உடல் உறுப்புகள் ஒருவரை மட்டுமல்ல; ஐந்து பேரை காப்பாற்றி இருக்கிறது. அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். கேரளாவில் லாக்-டவுன் நேரத்தில் ஐந்தாவது முறையாக இப்படி முழு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்